கோவையில் இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் காவலர் மனைவி உயிரிழப்பு: இரு குழந்தைகள் காயம்


கோவை: கோவையில் இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் காவலர் மனைவி உயிரிழந்தார். இரண்டு குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

கோவை சின்ன தடாகம் அருகேயுள்ள வடக்கு வீதியைச் சேர்ந்தவர் தனசேகரன். ஆயுதப்படை தலைமைக் காவலர். இவரது மனைவி பவித்ரா(35). இவரது மகள் அன்பு(4). இந்நிலையில், பவித்ரா, தனது மகள் அன்பு, உறவினர் மகள் கயல்(8) ஆகியோரை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் கல்லாறு பழப்பண்ணைக்கு சென்றார்.

தனசேகரன் தனி இருசக்கர வாகனத்தில் பின் சென்றார். பழப்பண்ணை மூடப்பட்டு இருந்ததால் , பவித்ரா காரமடை டீச்சர்ஸ் காலனியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வேன், பவித்ராவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

பின்னர், வேனை நிறுத்தாமல் அந்த ஓட்டுநர் தப்பிச் செல்ல முயன்றார். பொதுமக்கள் பின் தொடர்ந்து வேனை மடக்கிப் பிடித்தனர். இதற்கிடையே வேன் மோதியதில் படுகாயமடைந்த பவித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் வந்த இரு குழந்தைகளும் காயமடைந்தனர். அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்திய நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் அணு (31) என்பவரை மேட்டுப்பாளையம் போலீஸார் கைது செய்தனர்.

x