மதுரை | திருட்டு வழக்கில் 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் கேரள நபர்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு


மதுரை: திருட்டு வழக்கில் 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வரும் கேரள நபரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மதுரை மகாளிப்பட்டியைச் சேர்ந்தவர் தனலெட்சுமி. இவர் 1996 பிப். 17ம் தேதி வீட்டு வாசலை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர் தனலெட்சுமி கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடிவிட்டார்.

இது தொடர்பாக தெற்குவாசல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்த விசாரணையில் தனலெட்சுமியிடம் செயின் பறித்தவர் கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த தாமஸ்ராஜ் (35) என்பது தெரியவந்தது.

இதையடுத்து தாமஸ்ராஜ் கைது செய்யப்பட்டு, இந்த வழக்கில் ஜாமீன் பெற்றார். அதன் பிறகு தாமஸ்ராஜ் தலைமறைவாகிவிட்டார்.

இந்த வழக்கு மதுரை நான்காவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ளது. தாமஸ்ராஜ் 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வருகிறார். இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தும், அவர் ஜூன் 24ல் நீதிமன்றத்தில் ஆஜராகவும் நீதித்துறை நடுவர் இன்று உத்தரவிட்டார்.