கோவை அருகே யானை தாக்கியதில் தொழிலாளி காயம்


யானை தாக்கி காயமடைந்த சின்னநீலன்.

கோவை: கோவையை அடுத்த மதுக்கரை நவக்கரை பகுதியில் ஒற்றை யானை தாக்கியதில் தொழிலாளி காயமடைந்தார்.

மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு சோளக்கரை அருகில் உள்ள தனியார் தோட்டத்தில் வேலை செய்து வருபவர் சின்ன நீலன் (54). மாவுதம்பதி கிராமத்தைச் சேர்ந்த இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாட்டு கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த மாடுகளை வெளியே கட்டுவதற்காக சென்றார்.

அப்போது, எதிர்பாராத விதமாக அவ்வழியே வந்த ஒற்றை யானை திடீரென சின்னநீலனை தாக்கி விட்டு சென்றது. இது குறித்து தகவலறிந்த வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

இதில், சின்ன நீலனுக்கு இடுப்பு பகுதியில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை நவக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.