ஓசூர் அருகே கள்ளத் துப்பாக்கி தயாரிக்கும் உபகரணங்கள் வைத்திருந்தவர் கைது


கொடகரையில் கள்ளத்துப்பாக்கி தயாரிக்க மல்லன் வைத்திருந்த உபகரணங்கள்.  (அடுத்தப்படம்) கைது செய்யப்பட்ட மல்லன்.

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கள்ளத் துப்பாக்கி தயாரிக்க உபகரணங்கள் வைத்திருந்த நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி, ஜவளகிரி உள்ளிட்ட வனப் பகுதிகளில் வன விலங்குகள் வேட்டையாடுவது, மரம் வெட்டி கடத்துவது உள்ளிட்ட வனக்குற்றங்களை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பி்ல் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அஞ்செட்டி அடுத்துள்ள கொடகரை கிராமத்தில் ஒருவர் கள்ளத் துப்பாக்கி செய்யும் பொருட்கள் வைத்திருப்பதாக அஞ்செட்டி வனத்துறையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் அப்பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட போது, கொடகரை எஸ்டி காலனியைச் சேர்ந்த மல்லன் (36), என்பவர் கள்ளத் துப்பாக்கி செய்யும் உபகரணங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்த துப்பாக்கி தயாரிக்கும் உபகரணங்களை பறிமுதல் செய்த வனத்துறையினர், அவரை அஞ்செட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக அஞ்செட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, எத்தனை பெயருக்கு தயாரித்து கொடுத்தார், அதன் மூலம் வன விலங்குகள் வேட்டையாடப்பட்டதா என மல்லனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.