சூரங்குடி அருகே ட்ரை சைக்கிள் மீது கார் மோதி விபத்து: சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழப்பு


கோவில்பட்டி: சூரங்குடி அருகே இன்று ட்ரை சைக்கிள் மீது காலை கார் மோதிய விபத்தில் சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ரெங்கன் மகன் சிலம்பரசன் (35). இவர் ஊர் ஊராக ட்ரை சைக்கிளில் (Tricycle) சென்று பழைய பேப்பர், அட்டை மற்றும் பிளஸ்டிக் பாட்டில்கள் சேகரித்து அதனை தூத்துக்குடியில் உள்ள கடையில் விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் சிலம்பரசன், அவரது மனைவி தங்கம்மாள் (35), தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி மாரியம்மாள் (60), முருகன் மகன் சதீஷ் (7) உள்ளிட்டோர் ட்ரை சைக்கிளில் இன்று காலை சூரங்குடி அருகே கீழ சண்முகபுரம் கிராமத்தில் பழைய பேப்பர், பிளாஸ்டிக் பாட்டில்கள்
மற்றும் அட்டைகளை சேகரித்தனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையை கடந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த கார், ட்ரை சைக்கிள் மீது மோதியது. இதில் சிறுவன் சதீஷ், தங்கம்மாள், மாரியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சிலம்பரசன், காரில் வந்த கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் குலவேளையைச் சேர்ந்த செல்வராஜ் (55), அவரது மனைவி குமரி தங்கம் (49) மற்றும் காரை ஓட்டி வந்த அவரது மகன் ஜெனிட் (29) ஆகியோர் காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூரங்குடி போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 3 பேரின் சடலங்களை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து சூரங்குடி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.