கடன் பிரச்சினையில் மகள், மகன், பேத்தியை கொன்றுவிட்டு சிவகாசி அருகே ஆசிரியர் தம்பதி தற்கொலை


திருத்தங்கல்லில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் அருந்தி தற்கொலை.

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் லிங்கம் (45). இவரது மனைவி பழனியம்மாள் (47).இருவரும் முறையே தேவதானம், சுக்கிரவார்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினர்.

இவர்களது மகள் ஆனந்தவல்லி(27). இவருக்குத் திருமணமாகி, 2 மாதங்களுக்கு முன் குழந்தைபிறந்தது. இவர்களது மகன் ஆதித்யா(14), சிவகாசியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று வெகு நேரமாகியும் லிங்கத்தின் வீட்டுக் கதவு திறக்காததால், அப்பகுதி மக்கள்போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் அங்கு வந்து பார்த்தபோது, லிங்கம், அவரது மனைவிபழனியம்மாள் ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தனர்.

மேலும், மகள் ஆனந்தவல்லி, மகன் ஆதித்யா, 2 மாத பெண் குழந்தை சஷ்டிகா ஓர் அறையில் இறந்து கிடந்தனர். போலீஸார்உடல்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீஸார் கூறியதாவது: பழனியம்மாளின் முதல் கணவர் சுந்தரமகாலிங்கம் சாலை விபத்தில் இறந்ததால், 15 ஆண்டுகளுக்கு முன், உடன் பணியாற்றிய லிங்கத்தை திருமணம் செய்து கொண்டார். ஆனந்தவல்லி, பழனியம்மாளின் முதல் கணவருக்கு பிறந்த மகள்.சென்னை ஐ.டி. நிறுவனத்தில் உடன்பணிபுரிந்த பாலசுப்பிரமணியனை ஆனந்தவல்லி காதலித்து திருமணம்செய்து கொண்டார். பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்திருந்தார்.

ஆசிரியர் லிங்கம் 40-க்கும் மேற்பட்டோரிடம் கடன் வாங்கியிருந்தார். கடன் பிரச்சினை காரணமாக சில மாதங்களுக்கு முன் லிங்கம் தூக்கமாத்திரை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றார். பின்னர் பூர்வீக சொத்தை விற்று, கடனை அடைக்க முயற்சி செய்துள்ளார். சொத்தை விற்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, மகன் ஆதித்யா, மகள் ஆனந்தவல்லி, பேத்தி சஷ்டிகா ஆகியோருக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, கணவன், மனைவி இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்