புதுவை கூரியர் அலுவலகங்களில் போதைத் தடுப்பு போலீஸார் சோதனை


புதுச்சேரி: புதுச்சேரியில் கூரியர் அலுவலகங்களில் போதை தடுப்பு போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

போதைப் பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து கூரியர் மூலமாக கடத்தப்பட்டு புதுவைக்கு கொண்டுவரப்படுவதாக தகவல் வெளியானது. இதனிடையே சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் சிக்கியது. இதில் பெறுபவர் முகவரி புதுவை என குறிப்பிட்டிருந்தது. கூரியர் மூலமாகத்தான் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் புதுவை போலீஸாருக்கு தகவல் தெரிவித்து கண்காணிக்கும்படி அறிவுறுத்தினர்.

இதையடுத்து புதுவை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் இன்று கூரியர் அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தினர். பாலாஜி நகரில் உள்ள கூரியர் குடோவுன், அலுவலகத்தில் மோப்ப நாய் துணையுடன் தீவிர சோதனை நடத்தினர். இதில் எந்த போதைப் பொருட்களும் கிடைக்கவில்லை.

இதேபோல் மற்ற கூரியர் அலுவலகங்களிலும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. புதுவையில் அதிகரித்துள்ள போதைப் பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த துணை நிலை ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.