ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு மே 23-ல் இயங்காது: அடிக்கடி விடுமுறை விடப்படுவதாக மக்கள் ஆதங்கம்


புதுச்சேரி: புத்த பூர்ணிமாவையொட்டி ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு வரும் மே 23-ம் தேதி இயங்காது என்று ஜிப்மர் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'மத்திய அரசு விடுமுறை தினமான வரும் 23-ம் தேதி புத்த பூர்ணிமாவை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். எனினும் அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல இயங்கும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரி ஜிப்மருக்கு புதுச்சேரி மட்டுமில்லாமல் விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை உட்பட பல ஊர்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். இதுபற்றி நோயாளிகள் தரப்பில் பேசியவர்கள் "ஜிப்மரில் தற்போது வெளிப்புற சிகிச்சைப்பிரிவுக்கு அடிக்கடி விடுமுறை விடுகிறார்கள். இதற்கு வடமாநில பண்டிகைகளை காரணம் சொல்கிறார்கள். இதனால் இங்குள்ளோர்தான் தவிக்கிறோம்.

ஜிப்மரில் அடிக்கடி மத்திய அரசு விடுமுறை நாட்களில் எல்லாம் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது என்று அறிவிப்பதை தவிர்க்க புதுச்சேரி மற்றும் தமிழக அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் விடுமுறை நாட்களை, முன்பதிவு செய்திருக்கும் நோயாளிகளின் மொபைல் எண்களிலும் ஜிப்மர் தகவல் தெரிவிக்கவேண்டும். அப்போதுதான் பல கி.மீ தொலைவு பயணித்து வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதை தவிர்க்கமுடியும்'' என்றனர்.