பூந்தமல்லி: மதுபோதையில் தாயைத் திட்டியதால் தந்தையைக் கொன்ற மகன் கைது


பிரதிநிதித்துவப் படம்

திருவள்ளூர்: பூந்தமல்லி அருகே திருமழிசையில் தாயை மதுபோதையில் திட்டிய தந்தையை கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ள திருமழிசை பகுதியைச் சேர்ந்தவர் பாபு (49). தச்சு தொழிலாளியான இவருக்கு தேவி என்ற மனைவியும், தமிழரசன் (24) என்ற மகனும் உள்ளனர். திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த தமிழரசன், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில தினங்களாக வீட்டில் இருந்து வந்தார். மது அருந்தும் பழக்கம் கொண்ட பாபு, வழக்கம் போல் நேற்று மாலை பணி முடிந்து வீடு திரும்பாமல் மது அருந்திவிட்டு, இரவு வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது பாபுவின் மனைவி தேவி, தினமும் மது அருந்திவிட்டு வருவது குறித்து, பாபுவை கண்டித்துள்ளார். இதனால், கோபமடைந்த பாபு, மது போதையில் மனைவியை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனை கண்ட மகன் தமிழரசன், தந்தையை அமைதியாக இருக்குமாறு கூறியுள்ளார்.

அதனை பொருட்படுத்தாத பாபு, மனைவியை தொடர்ந்து திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த தமிழரசன், வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் பாபுவின் நெஞ்சு பகுதியில் குத்தினார். இதில், படுகாயமடைந்த பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள வெள்ளவேடு போலீஸார், முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில் தமிழரசனை கைது செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.