ஆவடி | போலி ஆவணம் மூலம் நிலம் விற்பனை


ஆவடி: சென்னை அருகே உள்ள கோவூர், கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணன் மனைவி வித்யா (35). இவர் போரூர், மதனந்தபுரம்,மாதா நகரில் 1,900 சதுர அடி நிலத்தை ரூ.65 லட்சம் கொடுத்துகிரயம் பெற்றுள்ளார்.

இந்நிலையில், இந்த நிலத்தின் உண்மையான உரிமையாளரான சுப்பராயுடு போன்று ஆள்மாறாட்டம் செய்து, போலியான பொது அதிகார பத்திரம் தயாரித்து, தன்னிடம் விற்பனை செய்தது வித்யாவுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து, வித்யா ஆவடி காவல் ஆணையரகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவின் நிலப் பிரச்சினை தீர்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில், ஆள்மாறாட்டம், போலி ஆவணம் மூலம் ரூ.65 லட்சம் மதிப்பிலான நிலத்தை விற்பனை செய்தது தொடர்பாக சென்னை, முகப்பேர் மேற்கு, கர்ணன் தெருவைச்சேர்ந்த ராகுல் என்ற பிரியன்குமார் (33) என்பவரை போலீ ஸார் கைது செய்தனர்.