பெருங்களத்தூர் | சித்தேரியில் செத்து மிதக்கும் மீன்கள் - விஷமிகள் கைவரிசையா என விசாரணை


பெருங்களத்தூர்: செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூரில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான சித்தேரி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

நோய்தொற்று பரவும் முன்பு ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை ஏரிக்குள் கலக்காதபடியும் பல்வேறு இறைச்சி கழிவுகளை ஏரியில் கொட்டுவதை தவிர்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அப்பகுதிவாசிகள் கூறியதாவது: ஏரியில் இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து கொட்டியதாலும், குடியிருப்பு பகுதியில் இருந்து கழிவு நீரை ஏரிக்குள் கலந்துவிட்டதாலும் நீர் மாசடைந்து குடிக்க தகுதியற்றதாக மாறியது. இந்நிலையில் ஏரியில் உள்ள மீன்கள் கடந்த சில நாட்களாக செத்து மிதந்து வருகின்றன. இதனால் ஏரி முழுவதும் மீன்கள் இறந்து மிதக்கின்றன. பயங்கர துர்நாற்றம் வீசுகிறது.

ஏரியியில் செத்து மிதக்கும் மீன்களை பறவைகள் ஏரியிலிருந்து கொத்திச் சென்று அருகில் உள்ள வீடுகளின் கூரைகள் மொட்டைமாடி தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்டவற்றில் போடுகின்றன. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே செத்து மிதக்கும் மீன்களை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் மண்ணின் தன்மை மாறியதால், தண்ணீரில் விஷத்தன்மை ஏற்பட்டதா அல்லது ஏதாவது விஷமிகளின் செயலா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்திட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஏரியில் பச்சை நிற நுண் பாசிகள் உள்ளன. இந்த பாசிகளுக்கு போதிய அளவு ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றால் நீரில் இருக்கும் அனைத்து ஆக்சிஜனையும் உறிஞ்சிக் கொள்ளும். அப்பொழுது மீன்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் அவை இறக்க நேரிடலாம். ஆனால், மீன்வளத்துரை அதிகாரிகளோ, “பருவநிலை மாற்றம் காரணமாக மீன்கள் செத்து மிதந்திருக்கலாம்” என்கின்றனர்.

பெ. ஜேம்ஸ் குமார்