“தாயை அவதூறாக பேசியதால் கத்தியால் குத்தினேன்” - நண்பரை கொன்ற ரவுடி வாக்குமூலம் @ சென்னை


கைதான ரஞ்சித் குமார்

சென்னை: தாயை அவதூறாக பேசியதால் கத்தியால் குத்தி கொலை செய்ததாக கைதான ரவுடி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை ஏழுகிணறு, பரமானந்த முதலி தெரு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (27). இவர், பாரிமுனை பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கடையில் வேலை செய்து வந்தார். கொடுங்கையூர் எம்ஜிஆர் நகர் 6வது தெருவைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்ற ரஞ்சித் (20). இவர், பாரிமுனையில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இருவரும் நண்பர்கள்.

இந்நிலையில், இவர்கள் நேற்று இரவு ரஞ்சித் குமார் வீட்டில் ஒன்றாக மது அருந்தி விட்டு மாடியில் தூங்கி உள்ளனர். இன்று காலையில் சரவணன் சடலமாக கிடந்தார். ரஞ்சித் தலைமறைவானார். தகவல் அறிந்து கொடுங்கையூர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம் விரைந்து சரவணன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் ரஞ்சித் குமார் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், ஆந்திராவில் வசித்த ரஞ்சித்குமார் சுமார் 2 வருடங்களுக்கு முன் சென்னைக்கு வந்து, கொடுங்கையூரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளதும், இவர் மீது ஆந்திர மாநிலம், சூளுர்பேட்டை காவல் நிலையத்தில் 1 கொலை முயற்சி உட்பட 3 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

மேலும், சம்பவத்தன்று கொலையான சரவணன், ரஞ்சித்குமாரிடம் அவரது தாயை பற்றி அவதூறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார் வீட்டில் மறைத்து வைத்திருந்த 2 கத்திகளை எடுத்து சரமாரியாக குத்தி சரவணனை தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி உள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.