ஆரணி அருகே அழிந்த கோட்டையின் தடயங்கள்: வரலாற்று ஆய்வாளர் ஆர்.விஜயன் தகவல்


முருகமங்கலம் கிராமத்தில் அழிந்துபோனதாக கூறப்படும் கோட்டையின் தடயங்கள்

திருவண்ணாமலை: ஆரணி அடுத்த முருகமங்கலம் கிராமத்தில் அழிந்துபோன கோட்டை இருந்ததற்கான தடயங்கள் உள்ளதாக ஆரணி வரலாற்று ஆய்வாளரும், பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியருமான ஆர்.விஜயன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “ஆரணி அடுத்த முருகமங்கலம் என்ற கிராமத்தை, வரலாற்றில் படைவீடு ராஜ்ஜியத்து முருகமங்கல பற்று எனக் குறிப்பிடுவர். படைவீட்டை ஆண்ட சம்புவராய மன்னர்களின் முக்கிய ஆட்சிப்பகுதியாகவும் இருந்துள்ளது. இன்றைய ஆரணி நகரமே, அன்றைக்கு முருகமங்கல ஆட்சிப் பகுதியில் அடங்கிய ஒரு கிராமமாக இருந்துள்ளதாக கல்வெட்டுகளின் மூலமாக தெரியவருகிறது.

முருகமங்கலம் கிராமத்தின் தென்கிழக்குத் திசையில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. அதன் கரையின் மீது நடந்து சென்றால், கரையின் முடிவில் ஒரு வயல்வெளி காணப்படும். நன்செய் நிலமாகவும், புன்செய் நிலமாகவும் உள்ள அந்த இடமே அன்றைக்கு கோட்டை இருந்த இடமாகும். வயல் பகுதியில் பல இடங்களில் செங்கல் துண்டுகள், உடைந்த பானை ஓடுகளை, இப்போதும் காண முடிகிறது. விவசாய பணியில் ஏர் கொண்டு உழும் போது நிறைய செங்கல் துண்டுகள் வெளிப்படுகிறது. வேறு பெரியதாக, எந்த அடையாளங்களையும் தற்போது காணமுடியவில்லை. இப்பகுதியில் கோட்டை இருந்ததை ஆங்கிலேயர்கள், சில குறிப்புகளை மட்டுமே எழுதியும் வைத்துள்ளனர்.

படைவீடு ராஜ்ஜியத்தைப் போரில் வென்ற விஜயநகர படைகள், சம்புவராயர்களின் கோட்டை இருந்த முருகமங்கலத்தின் மீதும் தாக்குதல் நடத்தி இருக்கக்கூடும். இப்பகுதியில் போர் நடந்ததற்கு அடையாளமாக, ஏரிக்கு உட்புறமாக போரில் இறந்த ஒரு வீரனின் நடுகல் இருப்பதை பார்க்கலாம். அதுமட்டுமின்றி தேவிகாபுரத்தில் உள்ள தேவரடியர் குளத்திற்கு வட மேற்கில் இரண்டு மன்னர்கள் போரிடும் நடுகல் ஒன்றும், இக்கோட்டையின் வரலாற்றைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும்.

இதற்கு காரணம், ஆட்சி பீடத்தில் முருகமங்கலம் இருந்த காலத்தில் தேவிகாபுரம் என்ற ஊரே உருவாகவில்லை. முருகமங்கலத்தை வென்ற விஜயநகர படையினர், படைவீடு கோட்டையைப் போலவே இக்கோட்டையையும் அழித்துள்ளனர். அதனாலேயே இங்கும், எந்த சுவடுகளையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை எனலாம்.

முருகமங்கலம் என்ற இந்த ஊரின் மேற்கு திசையில் ராஜகெம்பீர மலை என்ற ஒரு சிறிய மலை உள்ளது. சம்புவராயர்களின் முக்கிய தலைநகரமான படவேடு பகுதியில் உள்ள கோட்டை மலையின் பெயரும் ராஜகெம்பீர மலை என்பதாகும். முருகமங்கல மலையின் உச்சியில் சம்புவராயர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு காவல்கோபுரமானது, தற்போது முழுவதும் சிதைந்த நிலையில் உள்ளது. கருங்கல்லால் அமைந்த அதன் அடித்தளம் மட்டுமே தற்போது காணமுடிகிறது.

இம்மலையின் அருகில் வீரசம்பனூர் என்ற கிராமம் உள்ளது. இதன் பெயரும் சம்புவராயர் என்ற அடையாளத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது. இதேபோல், செய்யாறு அடுத்த அழிவிடைதாங்கியில் அழிந்துபோன கோட்டை கண்டுபிடிக்கப்பட்டது” இவ்வாறு ஆர்.விஜயன் தெரிவித்தார்.

-இரா.தினேஷ்குமார்