பட்டாசு கடைக்கு ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் @ சிவகாசி


ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்

சிவகாசி: சிவகாசி அருகே அனுப்பங்குளத்தில் ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்ய சென்றபோது, சட்டவிரோத பட்டாசு உற்பத்தி செய்வது தெரியவந்ததை அடுத்து, ஆய்வுக்கு சென்ற ஆர்.ஐ., வி.ஏ.ஓ-வுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

சிவகாசி அருகே அனுப்பங்குளம் ராமலிங்கபுரத்தில் வடிவேல் என்பவர் அப்பகுதியில் இரு பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவர் பொது இடத்தை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டி உள்ளதாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் (ஆர்.ஐ) விக்னேஷ், கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) காளியப்பன் ஆகியோர் சனிக்கிழமை மாலை ஆய்வு செய்வதற்காக சென்ற போது, தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி செய்தது தெரியவந்தது.

அலுவலர்களைக் கண்டதும் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அப்போது வடிவேலின் உறவினர் சக்திவேலும், மற்றொருவரும் ஆர்.ஐ, வி.ஏ.ஓ-விற்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

தகவலறிந்து வந்த சிவகாசி வட்டாட்சியர் வடிவேல், பட்டாசு தொழில் தனி வட்டாட்சியர் திருப்பதி ஆகியோர் ஆய்வு செய்த போது, அனுமதியின்றி மூன்றாவதாக ஒரு பட்டாசு கடையும், தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பேன்சி ரக பட்டாசுகளை உற்பத்தி செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அனுமதி இல்லாத கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஆர்.ஐ விக்னேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் சிவகாசி கிழக்கு போலீஸார் சக்திவேல் உட்பட இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.