மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை பள்ளத்தில் மழைநீர் தேங்கியதால் விபத்து: முன்னாள் ராணுவ வீரரின் மனைவி உயிரிழப்பு


சாலை பள்ளம் (வலது) | உயிரிழந்த செந்தாமரை செல்வி (இடது)

ராஜபாளையம்: ராஜபாளையம் பெரிய கடை பஜார் தெருவைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (58). இவரது மனைவி செந்தாமரைசெல்வி (50). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். கோபால கிருஷ்ணன் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கோபால கிருஷ்ணன், செந்தாமரைசெல்வி இருவரும் சனிக்கிழமையை ஒட்டி ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை ஶ்ரீனிவாச பெருமாள் கோயிலுக்கு பைக்கில் சென்றனர்.

கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பும் போது, மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் எம்.பி.கே புதுப்பட்டி விலக்கு அருகே வந்த போது, இன்று பிற்பகலில் மிதமான மழை பெய்ததால் சாலையில் மழைநீர் தேங்கி இருந்தது. மழைநீர் சாலையில் உள்ள பள்ளத்தை மறைத்ததால், கோபால கிருஷ்ணன் ஒட்டி சென்ற பைக் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் பின்னால் அமர்ந்திருந்த செந்தாமரைசெல்வி தூக்கி வீசப்பட்டார்.

இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.

24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை ராஜபாளையம் பகுதியில், சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால், விபத்து அபாயம் நிலவுவதால் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

சமூக ஆர்வலர் அனுப்பிய புகார் மனுவிற்கு பதில் அளித்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) அதிகாரிகள் சாலையில் உள்ள பள்ளங்கள் சரி செய்யப்பட்டு, சாலை இலகுவான போக்குவரத்து பயணத்திற்கு ஏற்றதாக இருப்பதாக கடந்த அக்டோபர் மாதம் பதில் அளித்திருந்தனர்.

ஆனால் தற்போது சாலையில் உள்ள பள்ளதால் பெண் ஒருவர் உயிரிழந்திருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அசம்பாவிதம் ஏற்படும் முன் குண்டும் குழியுமாக உள்ள மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.