ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.7 லட்சத்தை இழந்த ஆந்திர மாணவர் தூக்கிட்டு தற்கொலை @ காஞ்சிபுரம்


ராமையா புகலா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமையா புகலா (21). இவர் தண்டலம் பகுதியில் உள்ள பொறியில் கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், ஆன்லைன் டிரேடிங், மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.

இணையதளங்கள் மூலம் பணம் செலுத்தி விளையாடுவது, டிரேடிங் செய்வது ஆகியவற்றை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார் இவர். இதற்காக தனது நண்பர்களிடம் அடிக்கடி கடனும் வாங்கியுள்ளார். ஆன்லைன் சூதாட்டம் மற்றும் டிரேடிங் மூலம் சுமார் 7 லட்ச ரூபாய் வரைக்கும் இழந்துள்ளார் ராமையா புகலா.

இந்நிலையில், விடுதியில் 4 பேருடன் தங்கி இருந்த ராமையா புகலா நேற்று முன்தினம் விடுதி அறையைவிட்டு வெளியில் சென்றுள்ளார். அப்படிச் சென்றவர் அதிகாலை 5 மணி வரை அறைக்குத் திரும்பவில்லை. இதனால் அவரது அறை நண்பர்கள் அவரை தேடி இருக்கிறார்கள்.
அப்போது, அருகில் பாரமரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்த விடுதி அறை உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ராமையாவின் நண்பர்கள் அந்த அறையின் கதவை உடைத்துச் சென்று பார்த்தனர்.

அப்போது அந்த அறைக்குள் மின்சார வயர் மூலம் மின்விசிறியில் தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்திருக்கிறார் ராமையா. இது தொடர்பாக உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ராமையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதேபோல் கடந்த 15-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த சீனுவாசன் தற்கொலை செய்து கொண்டார். தற்போது கல்லூரி மாணவர் ராமையா புகலாவும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு பலியாகி இருக்கிறார். இப்படி பலரது உயிர்குடித்து வரும் ஆன்லைன் சூதாட்டத்தை நிரந்தரமாக தடைசெய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 - 24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

x