வேலை செய்த வீட்டில் நகையைத் திருடி கடனை அடைத்த பணிப்பெண் கைது @ சென்னை


பணிப்பெண் கைது

சென்னை: வேலை செய்த வீட்டிலிருந்து 3 சவரன் நகையைத் திருடி அடகு வைத்து கடனை அடைத்த பணிப்பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் ஷாலினி (41). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘எனது வீட்டில் இருந்த 3 சவரன் நகை மாயமாகி இருக்கிறது. வீட்டினுள் வெளிநபர்கள் யாரும் வரமாட்டார்கள். எனக்கு வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் இந்திரா (47) மீது சந்தேகம் உள்ளது. அவரிடம் விசாரணை நடத்தி நகையை மீட்டு தர வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், பணிப்பெண் இந்திராவிடம் விசாரணை நடத்தினர். முதலில், நகையை தான் திருடவில்லை, தனக்கும் நகைக்கும் சம்பந்தம் இல்லை என இந்திரா கூறினார். இதையடுத்து போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்திய நிலையில் நகையை திருடியதை ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக போலீஸாரிடம் இந்திரா அளித்த வாக்குமூலம்: நான் முகப்பேர் பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் இறந்துவிட்ட நிலையில், அவர் வாங்கிய கடனை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து வருகிறேன். ஆனாலும், முழு கடனையும் என்னால் அடைக்க முடியவில்லை. இதனால், கடன் கொடுத்தவர்கள் எனது வீட்டிற்கு தினமும் வந்து தொல்லை கொடுத்து வந்தனர். இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தேன்.

இந்நிலையில் தான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், வேலை செய்யும் வீட்டின் பீரோவில் இருந்த 2 சவரன் நகையைத் திருடி, நகைக்கடையில் அடகு வைத்து அந்தப் பணத்தை கொண்டு கணவர் வாங்கிய கடனில் பாதியை அடைத்தேன்.

வெகு நாட்கள் ஆகியும் வீட்டில் இருப்பவர்கள் யாருக்கும் நகை தொடர்பாக சந்தேகம் வராததால், மீண்டும் கொஞ்ச நாள் கழித்து ஒரு சவரன் நகையை திருடி அடகு வைத்து முழு கடனையும் அடைத்து விட்டேன். ஆனால், இந்த முறை அவர்களிடம் சிக்கிக் கொண்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அடகு வைத்த கடையில் இருந்த நகைகளை மீட்ட போலீஸார், இந்திராவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.