கொடைக்கானல் அருகே கடமானை கொன்று சமைத்துச் சாப்பிட்ட 6 பேர் கைது


கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே வாழைகிரியில் கடமானைக் கொன்று சமைத்துச் சாப்பிட்ட 6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டு மாடு, கடமான், யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய தோட்டங்களுக்குள் நுழைவது வழக்கம். அதன்படி, ஜூன் 27-ம் தேதி கொடைக்கானல் அருகேயுள்ள வாழைகிரி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்துக்கு உணவு தேடி வந்த 2 வயது பெண் கடமான், அங்கிருந்த வேலியில் சிக்கியது. அதைப் பார்த்த, சிலர் கடமானைக் கொன்று சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், பெரும்பள்ளம் வனச்சரகர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினர் அங்கு சென்றனர். அப்போது, வனத்துறையினரை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இரண்டு நாட்களாக தலைமறைாக இருந்த அவர்களை இன்று வனத்துறையினர் கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் வாழைகிரியைச் சேர்ந்த செல்வக்குமார் (28), கன்னிவாடியைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணன் (24), காமக்காபட்டியைச் சேர்ந்த அஜித் (29), பண்ணைக்காடு பகுதியைச் சேர்ந்த சிவராமன் (27), சித்தரேவு பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (45), மன்னார்குடியைச் சேர்ந்த பிரவீன் (24) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

வேலியில் சிக்கிய கடமானை கொன்று சமைத்து சாப்பிட்டதும், அதனை சமூகவலை தளங்களில் பதிவிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக 6 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து டிராக்டர், பைக், கடமான் இறைச்சி மற்றும் ஆயுதங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.