கடலூர் அருகே நள்ளிரவில் ஆயுதங்களுடன் சுற்றிய 5 திருடர்களைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைந்த பொதுமக்கள்


கடலூர்: கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீழமணக்குடியில் நள்ளிரவில் ஊருக்குள் ஆயுதங்களுடன் சுற்றிய 5 திருடர்களை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் 5 பேரையும் தனி இடத்தில் வைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

கீழ்மணக்குடி கிராமத்தில் நேற்று (ஜூன் 28) 5 திருடர்கள் ஆயுதங்களுடன் அப்பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அந்த வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் அவர்கள் 5 பேரும் அந்த வீட்டுக்கு திருட வந்தது பதிவாகியது. வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளோம் என்பதை அறிந்த 5 திருடர்களும் திருட வந்ததை விட்டுவிட்டு, அதே கிராமத்தில் இரவில் மறைவான பகுதியில் பதுங்கி இருந்துள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள் 5 பேரும் இன்று (ஜூன்.29) அதிகாலையில் அந்த கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்த பகுதிக்கு சென்று பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது திருட வந்த வீட்டின் உரிமையாளர் அங்கிருந்த 5 பேரை பார்த்ததும் தன் வீட்டின் கேமராவில் பதிவான உருவம் போல இருக்கிறது என்று அதிர்ச்சியடைந்தார். பின்னர் கிராம மக்களை வரவழைத்து 5 பேரையும் வளைத்து பிடித்தார்.

இது குறித்து புவனகிரி போலீஸாருக்கு தகவல் தரப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாரிடம் கிராமமக்கள் 5 பேரையும் ஒப்படைத்தனர். போலீஸார் 5 பேரையும் அழைத்து சென்று தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம் கொடுகூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல், குமராட்சி பகுதியை சேர்ந்த அன்பழகன், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த சுரேஷ், திருச்சி சமயபுரம் பகுதியைச் சேர்ந்த மதியழகன், மும்முடி சோழகன் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு கொள்ளையில் தொடர்புடையவர்கள் என்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 5 பேரையும் போலீஸார் தனி இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

x