மெரினா கடற்கரையில் தோழியுடன் அமர்ந்து மது அருந்திய இளைஞர்களால் பரபரப்பு


சென்னை: மெரினா கடற்கரையில் தோழியுடன் அமர்ந்து மது அருந்திய இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மெரினா கடற்கரையில் நேற்றிரவு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடற்கரை மணல் பரப்பில் 2 இளைஞர்கள், இளம்பெண் ஒருவர் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர்.

சந்தேகத்துக்குரிய வகையில் அவர்கள் அமர்ந்திருந்ததை பார்த்த ரோந்து போலீஸார் அருகில் சென்று விசாரித்தனர். அப்போது, அவர்கள் மது போதையில் இருந்தது தெரியவந்தது. மேலும், அவர்கள் அருகில் கடற்கரையில் விற்கப்படும் துரித உணவுகளும், மது பாட்டில்களும் இருந்ததைக் கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீஸாரின் விசாரணையின் போது, அவர்கள் டாஸ்மாக்கில் மது வாங்கிக்கொண்டு, கடற்கரைக்கு வந்து மது அருந்தியது தெரியவந்தது. ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்து போகும் நிலையில் இளைஞர்கள் தோழியுடன் வந்து மது அருந்தியதை போலீஸார் கண்டித்து அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.