கிர்கிஸ்தான் தாக்குதல்  முதல் மோடி ஆவேசம் வரை | Top 10 News @ 11.30 AM


கிர்கிஸ்தானில் இந்திய மாணவர்களுக்கு அறிவுரை: கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் சர்வதேச மாணவர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனை ஒட்டி இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள் அங்குள்ள தத்தம் மாணவர்களைப் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளன.

6 மாநிலங்களில் வெப்பம்; 3 மாநிலங்களில் கனமழை: ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிஹார் ஆகிய 6 மாநிலங்களில் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, கேரளா, தென் கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எம்ஜிஆர் மருத்துவ பல்கலை.யில் ரத்த அழுத்த மேலாண்மை படிப்பு: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலையில், ‘உயர் ரத்த அழுத்தமேலாண்மை’ தொடர்பான ஓராண்டு பயிற்சி படிப்பு தொடங்கப்பட உள் ளது என்று பல்கலைக்கழக துணைவேந்தர் கே.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

விளையாட்டு படிப்புகளுக்கு ஜூன் 10 வரை விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசின் உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் 2024-2025-ம் கல்வி ஆண்டில் சேருவதற்கு தற்போது ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. பிளஸ் 2 முடித்தவர்கள், பட்டதாரிகள் www.tnpesu.org என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஜுன் மாதம் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் லில்லி புஷ்பம் தெரிவித்துள்ளார்.

இளம்பெண் கடத்தல் நாடகம், போலீஸ் எச்சரிக்கை: தி.நகரில் காரில் இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிறுமி தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததை உறவினர்கள் கேலி செய்வதை நிறுத்துவதற்காக வேடிக்கையாக, ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என விளையாட்டாகக் கூச்சலிட்டது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல் உதவி ஆணையர் ஆல்டர் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தார்.

விடுமுறை கால அமர்வில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய கோரிக்கை: ஏற்கெனவே தள்ளுபடியான ஜாமீன்மற்றும் முன்ஜாமீன் மனுக்களை விடுமுறை கால அமர்வில் மீண்டும் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

“தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்” - பிரதமர் ஆவேசம்: “ஒருசில தொழிலதிபர்களுக்கு மட்டும் எனது அரசு உதவுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார். அவர்கள் யாருக்காவது நான் முறைகேடாக உதவியிருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்” என்று பிரதமர் மோடி கூறினார்.

கேஜ்ரிவாலை விமர்சித்த அமித் ஷா: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கருத்துகள் உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம் செய்துள்ளார்.

தாய்லாந்து ஓபன்:அரை இறுதியில் இந்திய ஜோடி தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

35 நாளில் சிம்பொனி இசை - இளையராஜா: இசையமைப்பாளர் இளையராஜா 35 நாளில், சிம்பொனி ஒன்றை எழுதி முடித்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.