காணாமல் போன இளம் பெண் ஏரியில் சடலமாக மீட்பு: போலீஸார் விசாரணை


கோப்புப் ப்டம்

வண்டலூர்: வண்டலூர் அருகே காணாமல் போன 16 வயது இளம் பெண் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வண்டலூர் அருகே மாம்பாக்கம் பெரியார்நகர் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி கிருத்திகா தேவி. இவர்களின் மகள் நிவேதா (16). இவர் வண்டலூர் அருகே ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உள்ள கேண்டினில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வீட்டில் இருக்கும்போது எப்போதும் சொல்போனில் பேசியபடியே இருப்பாராம்.

அதற்காக நிவேதாவை தாய் கிருத்திகா தேவி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நிவேதா தாயிடம் கோபித்துக் கொண்டு வேலைக்கு செல்வதாகச் சொல்லிவிட்டு கடந்த 17-ம் தேதி வீட்டைவிட்டு புறப்பட்டிருக்கிறார். அதன் பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. அவரது போனும் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை இரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகிலுள்ள ஏரியில் சடலமாக கிடந்திருக்கிறார் நிவேதா. தகவல் அறிந்து அங்கு வந்த தாழம்பூர் போலீஸார் நிவேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தாய் திட்டியதால் நிவேதா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணத்தால் அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.