மின்தடைக்கு ஏற்றி வைத்த மெழுகுவர்த்தியால் தீ விபத்து: பொருள்கள் எரிந்து நாசம்


மெழுகுவர்த்தி | கோப்புப் படம்

சென்னை: மின்தடை காரணமாக ஏற்றி வைத்த மெழுகுவர்த்தியால் வீட்டில் இருந்த பொருட்கள் தீ பற்றி எரிந்து சேதமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சாந்தோம் லூப் சாலையில் உள்ள அரசு நகர்புற மேம்பாட்டு குடியிருப்பைச் சேர்ந்தவர் டார்வின். இவரது மகள் ஸ்டெஃபி (20). டார்வினுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) ஸ்டெஃபி மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.

இந்தநிலையில் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்டெஃபி வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துவிட்டு உறங்கியுள்ளார். அப்போது மெழுகுவர்த்தியின் தீ அருகில் இருந்த உடைமைகளில் பற்றி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது. திடீரென விழித்துப் பார்த்த ஸ்டெஃபி நிலைமையைை உணர்ந்து உடனடியாக அறையை விட்டு வெளியேறி அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

அந்தப் பகுதி மக்கள் விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதற்கிடையில் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. எனினும் தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்பே தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

இந்தத் தீ விபத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடைமைகள் அனைத்தும் கருகியது சேதமடைந்தது. விபத்து தொடர்பாக மயிலாப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.