கடலூரில் திருநங்கை மீது தாக்குதல்: சக திருநங்கைகள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு


போலீஸ் விசாரணை | கோப்பு படம்

கடலூர்: கடலூரில் இரண்டு திருநங்கைகள் இடையே ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரண்டு திருநங்கைகள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் பல்வராயன் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதஜோதி (18), திருநங்கை. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி மற்றொரு திருநங்கைகளான வர்ஷா மற்றும் சாம்பவி ஆகியோருடன் சேர்ந்து புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தங்கி தெருக்கூத்து ஆடிவந்தார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேதஜோதிக்கும் வர்ஷாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் இருவரும் தனித்தனியாக பிரிந்தனர். இந்த நிலையில், காட்டுக்கருணை கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தான் நடத்தி வரும் மகாலட்சுமி நாடக மன்றத்தில் இணையுமாறு வேதஜோதியை கேட்டுள்ளார்.

ஆனால், அந்தக் குழுவில் வர்ஷா இருப்பதால் தன்னால் அக்குழுவில் சேரமுடியாது என வேதஜோதி மறுத்துள்ளார். இருப்பினும் மணிகண்டன் அவரை சமாதானம் செய்து தனது நாடக குழுவில் இணைத்துள்ளார்.

இந்தச்சூழ்நிலையில். கடந்த 15-ம் தேதி தேதி இரவு 7 மணிக்கு மணிகண்டன் வீட்டின் அருகில் வர்ஷா மற்றும் வேதஜோதி இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வர்ஷா, சாம்பவி, மணிகண்டன், லோகேஷ் ஆகியோர் வேதஜோதியை அவதூறாக பேசி மிரட்டி அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் காயம் அடைந்த வேதஜோதியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீஸார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.