“தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்” - பிரதமர் மோடி ஆவேசம்


புதுடெல்லி: “ஒருசில தொழிலதிபர்களுக்கு மட்டும் எனது அரசு உதவுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார். அவர்கள் யாருக்காவது நான் முறைகேடாக உதவியிருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்” என்று பிரதமர் மோடி கூறினார்.

தொலைக்காட்சி நேர்காணலில் பிரதமர் மோடி கூறியது: “ஒருசில தொழிலதிபர்களுக்கு மட்டும் எனது அரசு உதவுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டுகிறார். நாட்டின் வளத்தை உருவாக்குபவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது சமஅளவில் நான் அக்கறை செலுத்துகிறேன்.

என்னை பொருத்தவரை நாட்டின் வளர்ச்சிக்கு முதலீட்டாளர்களின் பணம், நிர்வாகத்தினரின் புத்திசாலித்தனம், உழைப்பாளர்களின் வியர்வை ஆகிய அனைத்தும் முக்கியம்.

நாட்டில் வளத்தை உருவாக்குபவர்களுக்கு துணைநிற்கிறேன். அவர்கள் யாருக்காவது நான் முறைகேடாக உதவியிருந்தால் என்னை தூக்கிலிடுங்கள். தண்டனையை ஏற்க தயார். நாடாளுமன்றத்தில் ஜவஹர்லால் நேரு அரசைக்கூட டாடா - பிர்லா அரசு என்றுதான் குற்றம்சாட்டினர். அதே குற்றச்சாட்டை நானும் ஏற்க வேண்டும் என சோனியா காந்தி குடும்பம் விரும்புகிறது.

சுதந்திர தின நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்கள் பட்டியலில் விளையாட்டு வீரர்கள், சாதனையாளர்களை நான் சேர்க்கிறேன். சாதனை படைத்தவர்களை மதிக்காவிட்டால், விஞ்ஞானிகள், முனைவர்கள் எப்படி கிடைப்பார்கள். அனைத்து துறைகளிலும் சாதனையாளர்கள் மதிக்கப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் கூறினார்.

‘மெட்ரோ ரயில் திட்டம் எப்படி முன்னேறும்?’ - எல் அண்ட் டி தலைவர் சங்கர் ராமன் சமீபத்தில் அளித்த நேர்காணலில், “தெலங்கானா அரசு இலவச பேருந்து பயண திட்டத்தை அறிவித்துள்ளது. அதனால் மெட்ரோ ரயிலில் கூட்டம் இல்லை. எனவே, ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை விற்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்” என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, “ஒரு நகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருகிறீர்கள். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, அதே நகரில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என வாக்குறுதி அளிக்கிறீர்கள். இதன் காரணமாக, மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை பாதியாக குறையும். இப்படி இருந்தால் மெட்ரோ ரயில் திட்டம் எப்படி முன்னேறும். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மாநில அரசுகள் பல இலவச திட்டங்களை அறிவித்து கடும் நிதி நெருக்கடியில் சிக்குகின்றன” என்றார்.

இதனிடையே, “காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமர் கோயிலை புல்டோசர் மூலம் இடிப்பார்கள்” என்று உத்தர பிரதேச மாநிலம் பாராபங்கியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது குறிப்பிடத்தக்கது.

x