கள்ளக்குறிச்சி: முறையான மருத்துவம் படிக்காமல் வைத்தியம் பார்த்த போலி மருத்துவர் கைது


போலி மருந்துவர் சரவணன்

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே முறையாக மருத்துவம் படிக்காமல் மக்களுக்கு வைத்தியம் பார்த்து வந்த போலி மருந்துவரை போலீஸார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், விருகாவூர் கிராமத்தில் இயங்கி வரும் சரவணா மெடிக்கல் கிளினிக் மற்றும் லேப் சென்டரில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்தக் கிளினிக்கை நடத்தி வரும் சரவணன் என்பவர் முறையாக மருத்துவம் படிக்காமல் டிப்ளமோ முடித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. முறையாக படிக்காமல் மருத்துவம் செய்வதால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று தெரிந்தும், சரவணன் மருத்துவம் பார்த்துள்ளார்.

மேலும், காலாவதியான மருந்துகளும் அவரது சரவணா மெடிக்கல் கிளினிக்கில் இருப்பு வைத்திருந்ததும், மருத்துவப் பொருட்களை சரவணா மெடிக்கல் பெயரில் வாங்கி இருந்ததும் தெரியவந்தது. அந்த மருந்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்த மருத்துவக் குழுவினர், சரவணன் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.