காரைக்குடி அருகே பெண்ணை கொலை செய்தவர் கைது


மோகன்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, தலையில் கல்லைப் போட்டு பெண்ணை கொலை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூர் பிள்ளையார் கோயில் அருகே அடையாளம் தெரியாத 35 வயதுள்ள பெண் ஒருவர் ஜூன் 9-ம் தேதி காலை சடலமாக மீட்கப்பட்டார். அவரது தலையில் யாரோ கல்லைப் போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து பள்ளத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், பள்ளத்தூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக ஆண் ஒருவருடன் கொலை செய்யப்பட்ட பெண் தெருக்களில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. இருவரும் இரவில் சாலையோரங்களில் தங்கி, காலி மதுப்பாட்டில்களை சேகரித்து, அவற்றை விற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளனர்.

இதனிடையே, இருவரும் அடிக்கடி மது அருந்திவிட்டு, தெருக்களில் சண்டையிட்டு வந்துள்ளனர். மேலும், அந்தப் பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் அவருடன் இருந்த நபர் தலைமறைவானது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தொடர் விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த அமுதா (35) என்பது தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், கணவர், பிள்ளைகளை அமுதா பிரிந்துள்ளார். பின்னர், அமுதாவிற்கு சிலருடன் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் சத்திரப்பட்டியைச் சேர்ந்த மோகன் (37) என்ற நண்பருடன் பள்ளத்தூருக்கு வந்தார். இதனிடையே, அமுதாவுக்கும் மோகனுக்கும் இடையில் அடிக்கடி சண்டையும் சச்சரவும் நீடித்த நிலையில் மோகன், அமுதாவின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு தப்பியது தெரியவந்தது. இதையடுத்து, தீவிரமாக தேடி வந்த மோகனை பள்ளத்தூர் போலீஸார் இன்று கைது செய்தனர்.