திருப்பூர்: மதுபோதையில் மின் கோபுரத்தில் ஏறி ரகளை செய்த நபரை மீட்ட போலீஸார்


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே மதுபோதையில் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி ரகளை செய்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் பத்திரமாக மீட்டனர்.

ஊத்துக்குளி வட்டம் காவுத்தம்பாளையம் வாமலைகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (50). இவர். வாமலைகவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தில், இன்று மதியம் மதுபோதையில் ஏறிவிட்டார். இதனை பார்த்த அப்பகுதியினர் குன்னத்தூர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து சுரேஷிடம் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடந்து, மின் கோபுரத்தில் இருந்து கீழிறங்கினார்.

திருமணமாகி, குழந்தைகள் இல்லாத நிலையில், மனைவி பிரிந்து சென்றதாகவும், மதுபோதை அதிகமான நிலையில் மின் கோபுரத்தில் ஏறியதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் எவ்வித அசாம்பாவிதமும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக குன்னத்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.