ஒப்பந்ததாரர்களின் இடத்தில் ரயில்வே ஊழியர்களின் வாகனங்களை நிறுத்த கட்டண சலுகை: ரயில்வே நிர்வாகம் உத்தரவு


பிரதிநிதித்துவப் படம்

சென்னை: ரயில் நிலையங்களில் உள்ள ஒப்பந்ததாரர்களின் வாகன நிறுத்துமிடத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்தும் ரயில்வே ஊழியர்களுக்கு மாதாந்திர கட்டணத்தில் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்க ரயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தமிட வசதியை 2 ஆண்டு அல்லது 3 ஆண்டுகள் ஒப்பந்தம் அடிப்படையில் ஓப்பந்ததாரர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. இந்த அனுமதி தகுதியான அனைத்து ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தமிடத்துக்கும் பொருந்தும். சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்பட பெரும்பாலான ரயில் நிலையங்களில் ரயில்வே ஒப்பந்ததாரர்களின் வாகன நிறுத்துமிட வசதி இருக்கிறது. இங்கு டூவீலர் நிறுத்த மாதாந்திரம், 12 மணி நேரம், 24 மணி நேரம் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ரயில் நிலையங்களில் உள்ள ஒப்பந்ததாரர்களின் வாகன நிறுத்துமிடங்களில் இருசக்கர வாகனத்தை நிறுத்தும் ரயில்வே ஊழியர்களுக்கு மாதாந்திர கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சென்னை கோட்ட ரயில்வே முதுநிலை வணிக மேலாளர் வெளியிட்ட சுற்றறிக்கை: "வாகன நிறுத்த ஒப்பந்ததார்களுக்கு சிறப்பு நிபந்தனையை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. அதாவது, ரயில்வே ஊழியர்களின் இருசக்கர வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணத்தில் 50 சதவீதம் விதிக்க வேண்டும். வாகன நிறுத்தமிடத்தில் கட்டண விவரம் பற்றி தகவல் பலகையில் இடம் பெற வேண்டும். இது தவறாமல் இடம் பெற வேண்டும். பார்க்கிங் அனுமதி பெற்ற ஒப்பந்ததாரர்கள், அனைத்து இடங்களிலும் பார்க்கிங் கட்டண விவரத்தை வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஓய்வு பெற்ற மூத்த ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி மனோகரன் கூறுகையில், "ரயில் நிலையங்களில் ஒப்பந்ததாரர்களின் வாகன நிறுத்தமிடங்களில் ரயில்வே ஊழியர்களின் இருசக்கர வாகனங்களுக்கு மாதாந்திரம் 50 சதவீதம் சலுகை கட்டணத்தில் வசூலிக்க தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த தொகையை ரயில்வே ஊழியர்களிடம் ஒப்பந்ததாரர்கள் வசூலிப்பதற்கு பதிலாக, ரயில்வே நிர்வாகமே ஒப்பந்ததாரர்களுக்கு செலுத்த வேண்டும். மேலும், ரயில் நிலையங்களில் ரயில்வே ஊழியர்களின் வாகனங்களை நிறுத்த ஒரு கொட்டகை அமைத்து கொடுக்க வேண்டும்" என்றார்.