டெல்லி போலீஸ் எனக் கூறி கோவையில் முதியவரிடம் ரூ.39.74 லட்சம் பறிப்பு


கோவை: கோவை சாயிபாபா காலனியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (70). இவரிடம் டெல்லி போலீஸ் அதிகாரி என்று சொல்லி ரூ.39.74 லட்சத்தை மோசடி செய்த நபரை சைபர் க்ரைம் போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இது தொடர்பாக சந்திரசேகர் கோவை மாநகர சைபர் க்ரைம் போலீஸில் அளித்துள்ள புகாரில் ‘நான் சாயிபாபா காலனி பகுதியில் ஆர்த்தோ கிளினிக்கை கடந்த 50 வருடங்களாக நடத்தி வருகிறேன். எனது வரவு, செலவு விவரங்களை கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் மூலமாக மேற்கொண்டு வருகிறேன். கடந்த மாதம் 23-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு என்னை செல்போனில் தொடர்புகொண்ட நபர் ஒருவர், தனது பெயர் அனில் யாதவ் எனவும், போலீஸ் உயரதிகாரி எனவும், டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து பேசுவதாகவும் கூறினார்.

எனது பெயரில், புதுடெல்லிக்கு உயர் ரக போதைப் பொருள் பார்சலில் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், அதை அவர்கள் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இவ்விவகாரம் தொடர்பாக என்னை கைது செய்ய முடிவுசெய்யப்பட்டு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நபர் கூறினார். இதனால் நான் அதிர்ச்சியடைந்தேன். தொடர்ந்து பேசிய அந்நபர், எனது வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது எனக் கேட்டார். நான் ரூ.39.74 லட்சம் உள்ளது எனக் கூறினேன். அந்த தொகையை தான் கூறும் வங்கிக் கணக்குக்கு உடனடியாக அனுப்பும்படி கூறினார்.

அதை கருப்பு பணமா என விசாரித்த பின்னர், திரும்ப அனுப்புவதாகவும் கூறிய அந்த நபர், இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். அந்த நபர் கூறியதை நம்பிய நான் அந்த நபர் கேட்டபடி ரூ.39.74 லட்சம் தொகையை எனது வங்கிக் கணக்கில் இருந்து அந்த நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு அனுப்பினேன். அதன் பின்னர், அந்த நபர் எனது தொகையை திரும்ப அனுப்பவில்லை. நான் இவ்விவகாரம் தொடர்பாக தெரிந்தவர்களிடம் விசாரித்த போது, மர்ம நபர் போலீஸ் அதிகாரி போல் பேசி என்னை மோசடி செய்தது தெரியவந்தது.

இது குறித்து போலீஸார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில், சைபர் க்ரைம் போலீஸார் மோசடி, ஏமாற்றுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர் மீது இன்று வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x