தஞ்சை அதிமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் டிஎஸ்பி, ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி வழக்கு


மதுரை: அதிமுக நிர்வாகியை தாக்கிய டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்த வித்யா, உயர் நீதிமன்ற கிளையி்ல் தாக்கல் செய்த மனு: “எனது கணவர் சண்முக ராஜேஸ்வரன். அதிமுக உறுப்பினராக இருந்தார். நாடாளுமன்ற தேர்தலில் பூத் ஏஜென்டாக இருந்த உலகநாதன் என்பவரை பாமகவினர் தாக்கினர். அவரை என் கணவர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

இந்நிலையில் பந்தநல்லூர் காவல் ஆய்வாளர் முத்துகிருஷ்ணராஜா ஏப்ரல் 20-ம் தேதி காலையில் என் வீட்டுக்கு வந்து கணவரின் கேஸ் கம்பெனிக்கு சென்று அவரை தாக்கியுள்ளார். பின்னர் கணவரை கைது செய்தனர். நீதித்துறை நடுவரின் உத்தரவின் பேரில் கணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் என் கணவர் மீது ஏப்.20-ல் இரு வழக்குகள் பதிவு செய்தனர்.

என் கணவரை தாக்கியது தொடர்பான சிசிடிவி கேமரா பதிவுகளுடன் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கணவருக்கு உரிய இழப்பீடும், டிஎஸ்பி ஜாபர்சாதிக், காவல் ஆய்வாளர் முத்துகிருஷ்ணராஜா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் மனு தொடர்பாக தஞ்சை மாவட்ட எஸ்பி, திருவிடைமருதூர் டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தனர்.