பெண் உடலை காரில் வைத்து சுற்றியவர்களை பிடித்த மதுரை தனிப்படையினருக்கு பாராட்டு


பெண் உடலுடன் காரில் சுற்றியவர்களை பிடித்த மதுரை தனிப்படை போலீஸாரை பாராட்டினார் தென் மண்டல ஐஜி கண்ணன்.

மதுரை: பெண்ணை கொன்று உடலை காரில் வைத்து சுற்றியவர்களை பிடித்த மதுரை மாவட்ட தனிப்படை போலீஸாரை தென் மண்டல ஐஜி கண்ணன் பாராட்டினார்.

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே நான்கு வழிச் சாலையில் பாண்டியராஜபுரம் சோதனைச் சாவடி அருகே மதுரை மாவட்ட காவல் துறையின் அதிவிரைவு தனிப்படையைச் சேர்ந்த எஸ்ஐ மாயாண்டி தலைமையில் ஆயுதப்படை காவலர்கள் சந்தான கிருஷ்ணன், சவுந்திர பாண்டியன், முருக பாண்டி மற்றும் வாடிப்பட்டி இரவு ரோந்து சிறப்பு காவல் ஆய்வாளர் உதயக்குமார், தலைமைக் காவலர் மாயக் கண்ணன் ஆகியோர் 3 நாட்களுக்கு முன்பு பணியில் இருந்தனர்.

அப்போது, காரில் பெண் உடலுடன் வந்த 2 பேரை பிடித்தனர். சம்பவ இடம் திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதால், அம்மைய நாயக்கனூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்து இருவரையும் அவர்களிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், பெண்ணை கொன்று காரில் கொண்டு சென்றது தெரியவந்தது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை பிடிக்க உதவிய மதுரை மாவட்ட அதிவிரைவு தனிப்படை போலீஸாரை தென் மண்டல ஐஜி கண்ணன் பாராட்டி பரிசளித்தார்.