சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை திருப்பூரில் தொடர்வதாக குற்றச்சாட்டு


பிரதிநிதித்துவப் படம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக் கண்ணன், ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜை நேற்று சந்தித்து அளித்த மனு: உடுமலையில் 2 பட்டியலின சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 9 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு, எஸ்.சி., எஸ்.டி., சட்டப்பிரிவின்படி நிவாரணத் தொகையை விரைந்து வழங்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் இது போன்று வழக்குகள் வந்த வண்ணம் உள்ளன.

கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு தாராபுரத்தில் ஒரு பட்டியலின சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதேபோல் காங்கயத்திலும் இதே போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த விஷயங்களில், உள்ளூர் காவல் நிலையங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். இதன் மீது காவல்துறை உடனுக்குடன் உரிய நடவடிக்கை மேற்கொள்வதை, மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

உளவியல் ரீதியாக மனநல சிகிச்சை அளிப்பதை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். உடுமலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் படிப்பு மற்றும் பாதுகாப்புக்கு சிறப்பு ஏற்பாடுகளையும், அதற்கான நிதியை அரசிடம் பெற்று வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றசம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.