வியாபாரியிடம் ரூ.34 ஆயிரம் பறித்த விவகாரம்: போக்குவரத்து எஸ்.ஐ பணியிடை நீக்கம் @ சென்னை


சென்னை: சென்னையில் வியாபாரியிடம் ரூ.34 ஆயிரம் பறித்த விவகாரத்தில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கீழ்பாக்கம் ஈ.வி.ஆர் சாலையில் கனரா வங்கி ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் கடந்த 9-ம் தேதி இரவு புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வியாபாரி சித்திக் (50) பணம் போடுவதற்காக வந்துள்ளார். அப்போது, சித்திக்கை நோட்டமிட்ட ஒருவர், கையில் வாக்கி டாக்கியுடன் வந்து தான் போலீஸ் என கூறி அவரிடம் பணத்துக்கான ஆவணத்தை கேட்டுள்ளார். பின்னர், சித்திக்கிடமிருந்து ரூ.34,500 பணத்தை பிடுங்கிச் சென்றுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சித்திக் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் போலீஸார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பணத்தை பறித்து சென்றது ஐசிஎப் காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ராமமூர்த்தி (55) என்பதும், கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பில் குடும்பத்தோடு குடியிருந்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தியை கீழ்பாக்கம் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ராமமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

x