திருப்பூர்: நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் கைது


திருப்பூர்: நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலமாக கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். போலீஸார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே கரையூரை சேர்ந்தவர் தீபக் திலக்( 45). இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு பல பகுதிகளில் நெட்வொர்க் மார்க்கெட்டிங் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தார்.

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு 15 மாதம் கழித்து 3 மடங்காக திருப்பித் தருவதாக விளம்பரம் செய்ததாக கூறப்படுகிறது. இதை நம்பி திருப்பூர், கோவை, பரமத்திவேலூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் முதல் இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர்.

ஆனால், ஆரம்பத்தில் சில மாதங்களுக்கு மட்டும் சொன்னபடி 3 மடங்காக பணத்தைத் திருப்பித் தந்தவர்கள் அதன் பிறகு முதலீடு செய்த பணத்தைக்கூட திருப்பிக்கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் அளித்தனர்.

இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் தீபக் திலக்கை போலீஸார் கைது செய்தனர். இந்தநிலையில் கோவையைச் சேர்ந்த சிவசண்முகம் என்பவர் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் அளித்த புகாரில், தானும் தனது குடும்பத்தினர் 11 பேரும் சேர்ந்து ரூ.35 லட்சத்தை தீபக் திலக்கின் நிறுவனத்தின் முதலீடு செய்ததாகவும், ரூ.12 லட்சம் திருப்பிக்கொடுத்த நிலையில் ரூ.23 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா இது குறித்து வழக்குப்பதிவு செய்து, தீபக் திலக்கை நேற்று இரவு (மே 31) கைது செய்தார். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட திலக்கை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த விவரங்கள் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.