கணக்கில் வராத பணம்: ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறை @ ஶ்ரீவில்லிபுத்தூர்


ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 2013ம் ஆண்டு நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட வழக்கில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் உட்பட இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பகுதி அலுவலகத்தில் கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் கனகராஜிடம் இருந்து ரூ.47,230, ராமராஜ் என்பவரிடமிருந்து ரூ.17,100, வட்டார போக்குவரத்து அலுவலக உதவியாளர் வீரகுமாரிடம் இருந்து ரூ.900 கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.

இந்த வழக்கில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து கனகராஜ், ராமராஜ் ஆகியோர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு ஊழல் தடுப்பு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் கனகராஜ், ராமராஜ் இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ப்ரீத்தா தீர்ப்பளித்தார்.

உரிய ஆவணங்கள் இருந்தும் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் 94981 05882 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.