புதுக்கோட்டை அருகே கோயில் திருவிழாவில் இளைஞர் மாயம்: மீட்டுத் தரக் கோரி உறவினர்கள் மறியல்


புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் கோயில் திருவிழாவுக்குப் போன இளைஞர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே, மாயமான இளைஞரை கண்டுபிடித்துத் தரக்கோரி உறவினர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். விவசாயியான இவரது மகன் பிரசாந்த் (29). பட்டதாரியான இவர், கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு கடந்த 29-ம் தேதி சென்றுள்ளார். அப்படிச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

இது குறித்து பிரசாந்தின் பெற்றோரும் உறவினர்களும் பல்வேறு பகுதிகளில் தேடி உள்ளனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே, இளைஞர் மாயமானது குறித்து அவரது பெற்றோர் கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகார் மனு மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருப்பினும் மூன்று நாட்கள் ஆகியும் இளைஞர் பிரசாந்த் வீடு திரும்பாததால் அவரை கண்டுபிடித்துத் தரக்கோரி அவரது பெற்றோர் உறவினர்களுடன் கொத்தமங்கலம் கடை வீதி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீரமங்கலம் போலீஸார், இளைஞரை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. திடீர் சாலை மறியல் போராட்டத்தால் ஆலங்குடி - கீரமங்கலம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

x