திருவள்ளூர் அருகே இளைஞர் கொலை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


இளைஞர் கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மணவாள நகர் பகுதியில் ஏரிக்கரையில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அருகே உள்ள மோவூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (28). பெற்றோரை இழந்த இவர் மணவாளநகர் - எம்ஜிஆர் நகரில் உள்ள தமது அக்கா வீட்டில் வசித்து வந்தார். கியாஸ் சிலிண்டர் விநியோகித்தல், பெயின்ட் அடித்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார். இந்நிலையில், எம்ஜிஆர் நகர் பகுதியில் நேற்று இரவு பிறந்த நாள் விழா ஒன்று நடைபெற்றது. ஏராளமான இளைஞர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில், சதீஷ், அவரது நண்பர் முரளி ஆகியோரும் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடர்ந்து இளைஞர்கள் சிலர், அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த ஏரிக்கரையில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சதீஷின் உடல் கிடந்துள்ளது. அதன் அருகிலேயே வெட்டுக்காயங்களுடன் முரளி கிடந்திருக்கிறார். இதை இன்று காலையில் அவ்வழியே சென்றவர்கள் பார்த்துவிட்டு மணவாளநகர் போலீஸுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

இதையடுத்து, சம்பவ இடம் விரைந்த மணவாள நகர் போலீஸார், முரளியை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைசெய்யப்பட்ட சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து திருவள்ளூர் எஸ்பி-யான சீனிவாச பெருமாள் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினார். இந்தக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடைபெற்றதா உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.