ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் விரக்தி: கும்பகோணம் அருகே இளைஞர் தற்கொலை


ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்ட இளைஞர் தினசீலன்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் விரக்தியடைந்த இளைஞர், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

மயிலாடுதுறை பெரிய தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் தினசீலன்(31). இவர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலையில் தனியார் தங்கும் விடுதியில் பணிபுரிந்து வந்தார்.

நேற்று காலை வழக்கம்போல சில பணிகளை செய்துவிட்டு மீண்டும் தனது அறைக்குச் சென்ற தினசீலன், பின்னர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக ஊழியர்கள் அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது, தினசீலன், மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த சுவாமிமலை போலீஸார் தினசீலன் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "தற்கொலை செய்துகொண்ட தினசீலனின் சட்டைப் பாக்கெட்டில் இருந்து ஒரு கடிதம்கைப்பற்றப்பட்டது. அதில், விடுதியின் பணத்தை எடுத்து ஆன்லைன் ரம்மி விளையாடியதில் பல ஆயிரங்களை இழந்துவிட்டதாகவும், அதை திருப்பித் தர முடியாததால், மனவேதனையில் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவர் ஏற்கெனவே மயிலாடுதுறையில் பல்வேறு நபர்களிடம் பல லட்ச ரூபாய் கடனாகப் பெற்று ஆன்லைன் ரம்மி விளையாடி, அந்தப் பணம் முழுவதையும் இழந்துள்ளார். பின்னர் அவரதுகுடும்பத்தினர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுவாமிமலையில் உள்ள தங்கும் விடுதியில் வேலை வாங்கிக் கொடுத்துள்ளனர். இங்கும் அவர் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததால் விரக்திஅடைந்து, தூக்கிட்டுத் தற்கொலைசெய்துகொண்டது தெரியவந்துள்ளது" என்றனர்.

x