அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் இருக்கிறார் வைகோ: வீடியோ வெளியிட்டு துரை வைகோ தகவல்


சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அறுவை சிகிச்சை முடிந்து நலமாக இருப்பதாக கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கட்சி நிர்வாகியின் மகள் திருமணத்துக்கு செல்வதற்காக கடந்த 25-ம் தேதி நெல்லையில் தனது சகோதரர் வீட்டில் தங்கியிருந்தார். அங்கு கால் இடறி விழுந்ததில் வைகோவின் இடது தோளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது.

முதல்கட்ட சிகிச்சைக்கு பிறகு சென்னை திரும்பிய அவர், ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இந்த நிலையில், வைகோ நேற்று முன்தினம் இரவு தனதுஉடல்நலம் குறித்து பேசி வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:

தலையிலோ, முதுகிலோ அடிபட்டிருந்தால் இயங்க முடியாமல்போயிருக்கும். ஆனால், இடதுதோளில் கிண்ணம் உடைந்திருக்கிறது. அதோடு, எலும்பும் 2 செ.மீ.நீளத்துக்கு கீறியுள்ளது. நான் நன்றாக இருக்கிறேன். முழு ஆரோக்கியத்தோடு வருவேன். முன்புபோல இயங்க முடியுமா என்று மட்டும் யாரும் சந்தேகப்பட வேண்டாம்.

நான் உழைப்புக்கு இலக்கணமானவன் என்று, முன்னாள் முதல்வர் கருணாநிதியே கூறியுள்ளார். தமிழகத்துக்கு மேலும் சேவை செய்ய காத்திருக்கும் வைகோ, முழு உடல்நலத்தோடு, பரிபூரண ஆரோக்கியத்தோடு வருவேன் என்பதையும், எனக்காக கவலைப்படும் உள்ளங்களுக்கு என் நன்றியையும் சொல்லிக் கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ கூறியிருந்தார்.

இந்நிலையில், திட்டமிட்டபடி நேற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, வைகோவின் உடல்நலம் குறித்து சமூக வலைதளத்தில் துரை வைகோ தெரிவித்துள்ளதாவது:

வைகோவுக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அவரது இடது தோளில் 3 இடத்தில் எலும்புகள் உடைந்திருந்தன. அதை சரிசெய்ய டைட்டானியம் பிளேட் வைக்கப்பட்டுள்ளது. 40 நாட்கள் ஓய்வுக்கு பிறகு, அறுவை சிகிச்சை செய்த தோள்பட்டை சரியாகி இயல்பு நிலைக்கு வந்துவிடும்.

தொற்று ஏதும் ஏற்படாமல் இருக்க, ஒரு வாரத்துக்கு பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதிஇல்லை என்று மருத்துவர்கள்கூறியுள்ளனர். எனவே, கட்சி நிர்வாகிகளும், நலம் விரும்பிகளும் அவரை சந்திக்க வருவதை தவிர்த்து, ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.