திருத்தணி | ரூ.6 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக உதவி பொறியாளர் உட்பட 3 மின் வாரிய ஊழியர்கள் கைது


திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே உள்ள வெடியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாபு. விசைத்தறி நெசவாளரான இவர், தன் தாய் பெயரில் வெடியங்காடு பகுதியில் விசைத்தறி கூடம் அமைப்பதற்காக விசைத்தறி மின் இணைப்பு வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தார்.

புதூரில் செயல்படும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அலுவலகத்தின் உதவிப் பொறியாளர் சுரேஷ்குமார், விசைத்தறி மின் இணைப்பு வழங்க ரூ.6 ஆயிரம் லஞ்சமாக அளிக்க வேண்டும் என, வயர்மேன் சண்முகம் மூலம் பாபுவிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத பாபு, இதுகுறித்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் அளித்தார். பின்னர், லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஆலோசனையின் படி, நேற்று மதியம் ரசாயன தூள் தடவப்பட்ட ரூ.6 ஆயிரத்தை உதவிப் பொறியாளர் சுரேஷ்குமார் அறிவுறுத்தலின் பேரில், மற்றொரு வயர்மேன் நித்யானந்தத்திடம் வழங்கினார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையின் திருவள்ளூர் டிஎஸ்பி ராமச்சந்திர மூர்த்தி தலைமையிலான போலீஸார், நித்யானந்தத்தை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் அடிப்படையில், உதவிப் பொறியாளர் சுரேஷ்குமார், வயர்மேன்கள் சண்முகம், நித்யானந்தம் ஆகிய 3 பேரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

x