கருடன்: திரை விமர்சனம்


தேனி மாவட்ட கோம்பை அம்மன் கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவராக இருக்கிறார் செல்லாயி (வடிவுக்கரசி). அவர் பேரன் கருணாவும் (உன்னி முகுந்தன்) ஆதித்தனும் (சசிகுமார்) சிறு வயது முதல் உயிர் நண்பர்கள். இவர்களுடன் வந்து சேரும் சொக்கன் (சூரி) கருணாவின் தீவிர விசுவாசியாக இருக்கிறான். இந்நிலையில், பத்திரப் பதிவுத் துறை அமைச்சராக இருக்கும் தங்கபாண்டி (ஆர்.வி. உதயகுமார்) கோம்பை அம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.300 கோடி பெருமான நிலத்தை அபகரிக்கத் தனது அதிகாரத்தை ஏவுகிறார்.

இதில் இந்த நண்பர்களின் கூட்டணிக் குள்ளும் குடும்பத்துக்குள்ளும் எப்படிப்பட்ட சிக்கல்கள் வந்து சேர்கின்றன, சொக்கன் யார் பக்கம் நின்றான்? அமைச்சரால் நிலத்தை அபகரிக்க முடிந்ததா? என்பது கதை.

முகமறிந்த நடிகர்களின் சிறப்பான பங்களிப்பை விட, திரைக்கதையும் காட்சி அமைப்புகளும்தான் முழுமையான திரை அனுபவத்தைத் தரும் என்பதற்கு இப்படம் சிறந்த எடுத்துக்காட்டு. சிறுவயது முதல் பழகும் 3 நண்பர்கள், அவர்களது தொழில், குடும்ப உறுப்பினர்கள், கோயிலுடன் இருக்கும் பிணைப்பு, இவர்கள் வாழ்க்கைக்குள் வரும் குறுக்கீடு, போலீஸ், ரவுடிகளை அமைச்சர் பயன்படுத்தும் விதம் என கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் பின்னிப் பிணைத்து எழுதியிருக்கும் விதமும் அவற்றைக் காட்சிப்படுத்திய விதமும் அபாரம்.

அதே நேரம், சிறு வயதில் துளிர்த்து, பெரியவர்கள் ஆன பிறகும் வலிமையுடன் விளங்கும் நட்பில், கருணாவால் ஏற்படும் பிளவு திரைக்கதையின் முக்கிய பலவீனம். கருணா இரண்டாம் பாதியில் கக்கும் வன்மத்தின் வேரை, நுகரமுடியாமலா ஆதித்தன் இத்தனை காலமாகப் பழகிக்கொண்டிருந்தான் என்கிற கேள்விக்குப் பதில் இல்லாவிட்டாலும் திரைக்கதையின் தொடர் நிகழ்வுகளும் திருப்பங்களும் கதை நகர்வை நோக்கி கவனத்தைக் குவிக்க வைக்கின்றன.

ஆதித்தன் - கருணா இருவருக்கிடையில் ஊடாடும் சொக்கனின் விஸ்வரூபம் தான் இரண்டாம் பாதியின் குறைகளை மீறி கதையை நகர்த்துகிறது. அதைத் தனது நடிப்பால் பிரித்து மேய்ந்திருக்கிறார் சூரி. தனது விசுவாசத்தை மெய்ப்பிக்க உண்மைகளை அவர் மடை திறந்த வெள்ளமாகக் கொட்டுவது, தனது விசுவாசம் உண்மைக்குப் புறம்பாகப் போகும்போது நியாயத்தின் பக்கம் சாய்ந்து ஆடும் ரணகளமான ஆட்டம் என சொக்கள் என்கிற சாமானியனாக சூரி, கிடைத்த களத்தை அதகளமாக்கிவிடுகிறார். நட்புக்காக எதையும் செய்யும் கதாபாத்திரத்தில் சசிகுமார் வழக்கம்போல் முத்திரை பதித்துச் சென்றுவிடுகிறார்.

அவரது மனைவியாக வரும் ஷிவதா, காவல் ஆய்வாளராக வரும் சமுத்திரக்கனி, செல்லாயி அப்பத்தாவாக வடிவுக்கரசி, விண்ணரசி ரேவதி ஷர்மா, கருணாவின் மனைவியாக வரும் ரோஷினி ஆகியோர் அற்புதமான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். சிறப்பான தொழில் நுட்பப் பங்களிப்பில் பிரதீப் இராகவ்வின் படத்தொகுப்புக்கு முதலிடமும் ஆர்த்தர் ஏ.வில்சனின் ஒளிப்பதிவுக்கு 2-ம் இசைக்கு இடமும் யுவன் சங்கர் ராஜாவின் 3-ம் இடமும் கொடுக்கலாம்.

பலமுறை தமிழ் சினிமா பட்டிப் பார்த்து மீண்டும் மீண்டும் பயன்படுத்திய நட்பு துரோகம் விசுவாசம் என்கிற பழையபார்முலா கதையாக இருந்தாலும் அதற்கு முடிந்த வரையில் புது பெயின்ட் அடித்து தேற்றப் பார்த்திருக்கிறது 'சொக்கன்' டீம்.