இயக்குநர் ஒமர் லுலு மீது நடிகை புகார்


நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் கண்ணடித்து பிரபலமான ‘ஒரு அடார் லவ்’ படத்தை இயக்கியவர் மலையாள இயக்குநர் ஒமர் லுலு. இந்தப் படம் தமிழிலும் வெளியானது. இவர், ஹேப்பி வெட்டிங், ஜிங்ஸ், தமாக்கா, பேட் பாய்ஸ் உட்பட சில படங்களை இயக்கியுள்ளார். இவர் மீது இளம் நடிகை ஒருவர், பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.

கொச்சி போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரில், பட வாய்ப்பு தருவதாகக் கூறி பழகி, தன்னை பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்துள்ளார். வழக்குப் பதிவு செய்துள்ள நெடும்பச்சேரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இப்புகாரை மறுத்துள்ள ஒமர் லுலு, வாய்ப்பு கொடுக்காததால், என் புகழைக் கெடுக்க அந்த நடிகை பொய் புகார் கொடுத்துள்ளார். போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.