‘அதிகாரத்தைக் கைப்பற்ற...’ - தைவானை வட்டமிட்டு ‘போர் முகம்’ காட்டும் சீனாவும் பின்புலமும்


தைவானைச் சுற்றி இரண்டாவது நாளாக ராணுவப் பயிற்சியை வெள்ளிக்கிழமை தொடங்கி உள்ள சீனா, "இது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஆயுதப் படைகளின் திறனைச் சோதிக்கும், தன்னாட்சி ஜனநாயக நாட்டின் முக்கியப் பகுதிகளைக் கட்டுப்படுத்தும் பயிற்சி" என்று தெரிவித்துள்ளது.

‘ஜாயின்ட் ஸ்வார்டு - 2024ஏ’ என்ற பெயரில் தைவானைச் சுற்றி இரண்டு நாள் ராணுவப் பயிற்சியை சீனா நேற்று (வியாழக்கிழமை) தொடங்கியது. இது, தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் தேவின் பதவி ஏற்பு விழாவின் உரைக்கான தண்டனை என்று சீனா தெரிவித்திருந்தது.

முன்னதாக, மூன்று நாட்களுக்கு முன்பாக தைவானின் புதிய அதிபராக பதவி ஏற்றுக்கொண்ட வில்லியம், "தைவான் சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடு. அதன் சுதந்திரத்தை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்காது. தைவானுக்கு எதிரான ஆக்கிரமிப்புகளை சீனா நிறுத்திக் கொள்ள வேண்டும் " என்று தெரிவித்திருந்தார்.

இந்த இரண்டு நாள் ராணுவ பயிற்சி குறித்து பிஎல்ஏ ராணுவத்தின் கிழக்குப்பகுதி செய்தித் தொடர்பாளரான கலோனல் லி ஸி கூறுகையில், "இந்த இரண்டு நாள் பயிற்சி என்பது, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான கூட்டு திறன், கூட்டு தாக்குதல், முக்கியப் பகுதிகளை கட்டுப்படுத்துவதற்கானது" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தைவானும் தனது ராணுவத்தை திரட்டி சீனாவின் செயல்பாடுகளையும் அதன் பயிற்சிகளையும் கண்காணித்து வருகிறது. இது குறித்து தைவானின் ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள படங்களில், எஃப்-16எஸ் விமானம் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்கள் தாங்கி வானில் வலம் வருவதையும், தைவானின் வடக்கு பகுதியில் உள்ள பீஜிங் தீவுக்கு அருகில் மற்ற கப்பல்களுடன் சீனாவின் கடலோரக் காவல் படை கப்பல்கள் பயிற்சியில் ஈடுபடுவதும் இடம்பெற்றிருந்தது.

சீன ராணுவம் வெளியிட்டுள்ள காட்சிகளில், ஒரு கட்டிடத்தில் இருந்து வீரர்கள் போர் நிலைக்கு ஓடுவதும், பயிற்சிக்காக ஜெட் விமானங்கள் புறப்படுவதையும் பார்க்க முடிந்தது.

சீனாவின் இந்த பயிற்சி அதன் ராணுவ மற்றும் அரசியல் அச்சுறுத்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அதனால், தைவானின் புதிய அதிபர் வில்லியம் லாய்-ஐ பிரச்சினையை உருவாக்குபவர் மற்றும் பிரிவினைவாதியாகவே சீனா கருதுகிறது. தனது முன்னவர் தேசய் இங் வென்-ஐப் போலவே, வில்லியமும் தைவான் மக்களின் எதிர்காலத்தை அவர்கள் மட்டுமே தீர்மானக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சீனாவின் வெளியுறவு விவகாரங்கள் துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் வியாழக்கிழமை நடந்த வழக்கமான செய்தியாளர் சந்திப்பின் போது, "முழுமையான ஒற்றுமையை அடையும் சீனாவின் போக்குக்கு எதிராக மோதும்போது, தைவானின் சுதந்திர படை வீரர்களின் தலைகள் உடைக்கப்பட்டு, ரத்தம் வழிந்தோடும்" என்று தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஷின்ஹுவா செய்தி நிறுவனம் மற்றும் ஆளுங்கட்சியின் செய்தித் தாளான ‘பிப்பிள்ஸ் டெய்லி’ இரண்டும் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தங்களின் தலையங்கத்தில், லாயின் துரோக நடத்தையை வசைபாடியுள்ளன. மேலும், கடுமையான அடி என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தைவானின் நெருங்கிய கூட்டாளியும், அதன் ராணுவ பலத்தில் பின்புலத்தில் நிற்கும் அமெரிக்கா, "சீனா நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்று கடுமையாக கூறியுள்ளது, அதே நேரத்தில் அனைத்து தரப்பினரும் பதற்றத்தை அதிகரிப்பதை தவிர்க்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

பின்புலம் என்ன? - சீனாவில் கடந்த 1949-ல் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது. அதுமட்டுமன்றி தேவை ஏற்பட்டால் தைவானைக் கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா அடிக்கடி கூறி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

இந்த பின்னணியில் இந்த இரண்டு நாள் போர் பயிற்சியை சீனா மேற்கொண்டுள்ளது. மேற்கில் உள்ள தைவான் ஜலசந்தி உள்ளிட்ட தீவுகளைச் சுற்றியும், தைவான் கட்டுப்பாட்டில் உள்ள கின்மென், மாட்சு, வுகியு போர் பயிற்சிகள் நடந்து வருகின்றன. இதில் சீன ராணுவத்தின் போர் விமானங்கள், கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.

x