கமலேஷ் படேலுக்கு ‘ஃப்ரீடம் ஆஃப் தி சிட்டி’ விருது @ லண்டன்


விருதை பெற்றுக் கொண்ட கமலேஷ் படேல்

சென்னை: லண்டன் நகரில் இயங்கி வரும் ஹார்ட்ஃபுல்னெஸ் அமைப்பின் வழிகாட்டியும், ஸ்ரீராம் சந்த்ர மிஷனின் தலைவருமான கமலேஷ் படேலுக்கு ‘ஃப்ரீடம் ஆஃப் தி சிட்டி’ விருது வழங்கப்பட்டுள்ளது. கல்வி, ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மற்றும் சமூக பணி சார்ந்த செயல்பாட்டுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

‘ஃப்ரீடம் ஆஃப் தி சிட்டி ஆஃப் லண்டன் விருது’, லண்டன் மாநகரத்தின் நகராட்சியால் வழங்கப்படும் மிகப்பெரிய கவுரவமாகும். இந்த விருதை கடந்த காலங்களில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, இந்தியவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங் உட்பட பல முக்கிய பிரபலங்கள் பெற்றுள்ளனர்.

சமீபத்தில் இந்த விருதைப் பேராசிரியர் சாரா கில்பர்ட், திரையரங்கு தொழில்முனைவோர் ரோஸ்மேரி ஸ்கையர், ஹோவர்ட் பான்டர் மற்றும் லண்டன் பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை தனியுரிமை அதிகாரி விவியென் ஆர்ட்ஸ் ஆகியோர் அடங்குவர்.

இந்த விருதுக்கு கமலேஷ் படேலை லண்டன் மாநகராட்சியின் கொள்கைத் தலைவர் கிறிஸ் ஹேவர்ட் மற்றும் ஃப்ரீடம் விண்ணப்பங்கள் கமிட்டி அமைப்பின் துணைத் தலைவர் ரெஹானா அமீர் ஆகியோர் பரிந்துரைத்தனர். இந்த விழாவில் கமலேஷ் படேலின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உள்ளூர் ஹார்ட்ஃபுல்னெஸ் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

“நான் மீண்டும் இங்கிலாந்திற்கு வந்திருப்பதிலும் எனக்கு அளிக்கப்பட்ட ‘ஃபிரீடம் ஆஃப் தி சிட்டி’ விருதினை ஏற்றுக்கொள்வதிலும் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த விருதானது லண்டனில் மட்டுமல்லாது உலகெங்கிலுமுள்ள ஹார்ட்ஃபுல்னெஸ் அமைப்பின் தன்னார்வலர்களுக்கும், பயிற்சி செய்பவர்களுக்கும் அளிக்கப்பட்ட கவுரவமாகும்.

முன்பை காட்டிலும் இப்போதுதான் அதிக அளவில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் தேவைப்படுகிறது. உலகை ஒருங்கிணைப்பதில் தியானப் பயிற்சி ஒரு முக்கிய கருவியாக விளங்குகிறது” என விருதினைப் பெற்றுக் கொண்ட கமலேஷ் படேல் தெரிவித்தார்.

x