ஈரான் அதிபர் ரெய்சி உயிரிழப்பு - இஸ்ரேல் ரியாக்‌ஷன் என்ன?


ஈரானில் உள்ள மலைப் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானதில், அந்நாட்டு அதிபர் சையது இப்ராஹிம் ரெய்சி (63) உயிரிழந்தார். ஹெலிகாப்டரில் உடன் சென்ற வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்ட 8 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் ரெய்சி உட்பட 9 பேர் உயிரிழந்ததை ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து, மதத் தலைவர் அயதுல்லா அலி காமெனி தலைமையில் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், இடைக்கால அதிபராக துணை அதிபர் முகமது மொக்பர் நியமிக்கப்பட்டார். ஈரான் சட்ட விதிகளின்படி, அடுத்த 50 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய அதிபர் தேர்வுசெய்யப்படுவார். அதுவரை இடைக்கால அதிபராக மொக்பர் பதவி வகிப்பார்.

யார் இந்த ரெய்சி? - கடந்த 1980 முதல் 1988 வரை நடந்தஈரான் - இராக் போரின்போது ஈரானை சேர்ந்த இடதுசாரி குழுவான முஜாகிதீன்-இ-கல்க் என்ற அமைப்பு ஈரான் ராணுவத்துக்கு எதிராக போரிட்டது. அவர்களுக்கு அப்போதைய இராக் அதிபர் சதாம் உசேன் ஆயுத உதவி வழங்கினார். போரின் முடிவில், முஜாகிதீன் இ-கல்க் அமைப்பை சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.

அப்போது ஈரான் நீதித் துறையின் உயர் அதிகாரியாக பதவி வகித்த சையது இப்ராஹிம் ரெய்சி தலைமையிலான ஆணையம், அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனையை நிறைவேற்றியது. நீதித் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த ரெய்சி, கடந்த 2019-ல் அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார். 2021-ல் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க,ரெய்சி உத்தரவிட்டார். இதை எதிர்த்து கடந்த ஆண்டில் பெண்கள் போராட்டம் நடத்தினர். இதில், பொதுமக்களில் 551 பேரும், பாதுகாப்பு படை வீரர்களில் 75 பேரும் உயிரிழந்தனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அதிபர் உயிரிழந்த நிலையில் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என அஞ்சப்படுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மறுப்பு: இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே தீவிர போர் நடந்து வருகிறது. இதில், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆயுத உதவி, நிதி உதவியை ஈரான் வழங்கி வருகிறது. இந்த போரின் எதிரொலியாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைகளை வீசியும், 300 ட்ரோன்கள் மூலம் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம், ஈரானின் அணு உலைகளுக்கு அருகே அதிநவீன ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த சூழலில், ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் ரெய்சி உயிரிழந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறும்போது, “ஈரானுக்கும் எங்களுக்கும் மோதல் இருப்பது உண்மைதான். ஆனால், ஹெலிகாப்டர் விபத்துக்கும், எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளன. இதனிடையே, ஈரான் நாட்டின் நிலவரத்தை மிக உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அமெரிக்க அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

x