ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு


தெஹ்ரான்: ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரெய்சி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். இதனை அந்நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில், அதன் உடைந்த பாகங்கள் இன்று (திங்கள்கிழமை) அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

நடந்தது என்ன?: அதிபர் ரெய்சி, அஜர்பைஜான் நாட்டில் இருந்து ஹெலிகாப்டரில் மூலமாக ஈரான் திரும்பி கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்பின் சுமார் 17 மணி நேர தேடுதலுக்கு பின்னரே ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. எனினும், விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் முழுவதும் தீயில் கருகி உருக்குலைந்து காட்சி அளிப்பதால், அதிபர் ரெய்சி உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விபத்து நிகழ்ந்த இடம் வனப்பகுதி என்பதால், கடும் பனி மூட்டம் கொண்ட வானிலை காரணமாக விபத்து நிகழ்ந்த இடத்தை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவி வந்துள்ளது. ஈரான் - அஜர்பைஜான் எல்லையில் அணை திறப்பு விழாவில் பங்கேற்க அதிபர் ரெய்சி சென்றிருந்தார். அவருடன் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலிக் ரஹ்மத்தி உள்ளிட்ட சில மூத்த அதிகாரிகளும் சென்றிருந்த நிலையில் அவர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

x