ஆஸ்திரிய தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை: இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த முயற்சி


ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் அலெக்ஸாண்டர் வான்டெர் பெலனை நேற்று சந்தித்தார்.

வியன்னா: ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் மோடி ஆஸ்திரியா சென்றார். அந்நாட்டு அதிபர், மற்றும் பிரதமரை சந்தித்து பலதுறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேசினார்.

மத்திய ஐரோப்பிய நாடுகளில்முக்கியமான நாடு ஆஸ்திரியா. இங்கு கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயர்தொழில் நுட்பங்கள், ஸ்டார்ட் அப் துறைகள், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கில் இருதரப்பு ஒத்துழைப்புகளுக்கு சிறந்த வாய்ப்புகள் உள்ளன.

ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி நேற்று முன்தினம் ஆஸ்திரியா சென்றார். இதற்கு முன் கடந்த 1983-ம் ஆண்டில்தான் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆஸ்திரியா சென்றார். அதன்பின் 41 ஆண்டுகள் கழித்து,இந்திய பிரதமர் ஒருவர் ஆஸ்திரியா சென்றுள்ளது இதுவே முதல்முறை.

ஆஸ்திரிய பயணம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, ‘‘ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படும் இரு நாடுகளும், எப்போதும் நெருக்கமான நட்பு நாடாக இருப்பதற்கான அடித்தளத்தை உருவாக்குகின்றன’’ என்றார்.

தலைநகர் வியன்னாவில் ஆஸ்திரிய அதிபர் அலெக்ஸாண் டர் வான்டெர் பெலன், பிரதமர் நெகாம்பர் ஆகியோரை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது பலதுறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தொழிலதிபர்களுடன் சந்திப்பு: கடந்த 2021-ம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற சிஓபி26 மாநாட்டிலும் அப்போதைய ஆஸ்திரிய பிரதமராக இருந்த அலெக் ஸாண்டர் செலன்பெர்க்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

அவர் தற்போது வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ளார். இந்தியா- ஆஸ்திரியா தொழில திபர்கள் கூட்டம், ஆஸ்திரியாவில் வசிக்கும் இந்தியர்கள் கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்றினார்.

ஆஸ்திரிய பிரதமர் நெகாம்பருடன் பிரதமர் நரேந்திர மோடி கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது: இது போருக்கான காலம் அல்ல. பிரச்சினைகளை போர்க்களத்தில் தீர்க்க முடியாது. பேச்சுவார்த்தை மூலம் அமைதி ஏற்படுத்தும்படி ரஷ்ய அதிபர் புதினிடம் வலியுறுத்தியுள்ளேன். உக்ரைனில் விரைவில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்த சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிக்க இந்தியாவும், ஆஸ்திரியாவும் தயாராக உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.