பிரிட்டன் புதிய பிரதமர் ஸ்டார்மெருடன் நரேந்திர மோடி பேச்சு: இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்த இரு தலைவர்களும் உறுதி


கோப்புப்படம்

புதுடெல்லி: பிரிட்டன் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மெரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இந்தியா வருமாறு பிரிட்டன் பிரதமருக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் லேபர் கட்சி அமோக வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மெர் நேற்று முன்தினம் புதிய பிரதமராக பதவியேற்றார்.இதைத் தொடர்ந்து ஸ்டார்மெரை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்றதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளை இரு தலைவர்களும் நினைவுகூர்ந்தனர். இரு நாடுகள்இடையிலான உறவை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் இந்தியா, பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய வேண்டும் என்றும் இருவரும் உறுதி பூண்டனர்.

பிரிட்டனின் சமூக, பொருளாதார, அரசியல் வளர்ச்சியில் இந்திய சமுதாயத்தின் நேர்மறையான பங்களிப்பை பிரதமர் ஸ்டார்மெர் பாராட்டினார். அப்போது இந்தியாவுக்கு வருமாறு பிரிட்டன் பிரதமருக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாடு: இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக பதவி வகித்தபோது இரு நாடுகள் இடையிலான உறவு வளர்ச்சி அடைந்தது. தேர்தல் தோல்வியால் அவர் பதவி விலகி, கெய்ர் ஸ்டார்மெர் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் லேபர் கட்சியின் அப்போதைய தலைவர் ஜெரிமி கார்பின், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கடைப்பிடித்தார். தேர்தல் பிரச்சாரத்தின்போது காஷ்மீர் விவகாரத்தை அவ்வப்போது எழுப்பினார். இதன்காரணமாக இந்திய வம்சாவளியினர் லேபர் கட்சியை புறக்கணித்து கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தற்போதைய பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் லேபர் கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மெர் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கடைப்பிடித்தார். காஷ்மீர்விவகாரத்தை முழுமையாக தவிர்த்தார். தீவிரவாத அமைப்புகளை வேரோடு ஒழிக்க வேண்டும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் அடிக்கடி வலியுறுத்தினார். இதன் காரணமாக இந்த முறை இந்திய வம்சாவளியினரில் பெரும்பாலானோர் லேபர் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். பிரிட்டனின் மக்கள்தொகை 6.7 கோடி ஆகும். இதில்இந்திய வம்சாவளியினர் 18 லட்சம்பேர் உள்ளனர். அந்த நாட்டின் பொருளாதாரத்தில் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பு 6 சதவீதம் ஆகும்.

முதல் அமைச்சரவை கூட்டம்: பிரிட்டன் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் தலைமையில் லண்டனில் நேற்று முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஸ்மார்மெர் பேசும்போது, “பிரிட்டன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும். சுகாதாரத் துறையை வலுப்படுத்த வேண்டும். மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்க வேண்டும். நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். இதற்கு அமைச்சர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.