மலாவி துணை அதிபர் பயணித்த ராணுவ விமானம் மாயம்


லிலொங்வே: கிழக்கு ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா, 9 பேருடன் பயணித்த ராணுவ விமானம் மாயமாகியுள்ளது. அவ்விமானத்தை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருதாக மலாவி அரசு தெரிவித்துள்ளது.

தலைநகர் லிலொங்வேயில் இருந்து திங்கள்கிழமை (ஜூன் 10) அன்று 51 வயதான துணை அதிபர் சவ்லோஸ் சிலிமாவுடன் அந்த ராணுவ விமானம் புறப்பட்டது. அவ்விமானம் சுமார் 370 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மசுஸு சர்தேச விமானநிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. லிலொங்வேயில் இருந்து புறப்பட்டு 45 நிமிடத்தில் இறங்க வேண்டிய இடத்தை அடையவேண்டிய நிலையில் விமானம் மாயமாகியுள்ளது.

விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானத்துடனான தொடர்பினை இழந்துள்ளனர். இந்தநிலையில் தேடுதல் பணியை துரிதமாக மேற்கொள்ளுமாறு மலாவி நாட்டு அதிபர் லாசரஸ் சக்வேரா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ரேடாருக்கு வெளியில் சென்றுள்ள விமானத்துடனான தொடர்பை பெற எல்லா வகையிலும் முயற்சி செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.